நலம்
மனநலம்
நலம் (Health) என்பது நோய் இன்மையும், நலிவற்ற நிலையும் மட்டுமின்றி முழுமையான உடல், உள, சமூக நன்னிலை ஆகும் என்று, 1948ல் உலக சுகாதார அமைப்பு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது[1]. இந்த வரைவிலக்கணம் இன்றும் பரவலாகப் பயன்படுகின்றது. எனினும், இதனோடு, உலக சுகாதார அமைப்பின் ஒட்டாவா நல மேம்பாட்டுப் பட்டயம் (Ottawa Charter for Health Promotion) போன்ற ஆவணங்களில் கொடுத்துள்ள வரைவிலக்கணங்களும் பயன்படுகின்றன. மேற்படி பட்டயம், நலம் அன்றாட வாழ்க்கைக்கான ஒரு மூல வளமேயன்றி வாழ்வின் நோக்கமே அதுவல்ல என்றும் அது தனிப்பட்ட, சமூக வளங்களுக்கும், உடற் தகுதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நேர்க் கருத்துரு என்றும் கூறுகிறது[2].
வகைப்பாட்டு முறைகளும் நலம் என்பதை விளக்குகின்றன. உலக வகைப்பாட்டு முறைகள் குடும்பம், செயல்பாடு, மாற்றுத்திறன், நலம் என்பவற்றுக்கான அனைத்துலக வகைப்பாடு, நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலகப் புள்ளியியல் வகைப்பாடு என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.
நலம் சமூகத்தின் பல்வேறு கூறுகளால் தீர்மானிக்கப்படுகிறது. உயிரிய, சூழலியல், வாழ்விய, சமூக, அரச, பொருளாதாரக் காரணிகள் ஒருவரின், அவர் சார்ந்த சமூகத்தின் நலத்தைத் தீர்மானிக்கிறது. ஒருவர் உணவு, உடற்பயிற்சி, கல்வி, உறவுகள், சமூகத் தொடர்புகள், வீட்டு வேலைச் சூழல், மருத்துவச் சேவைகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் எனப் பல நுண்ணிய கூறுகள் ஒருவரின் நலத்தைத் தீர்மானிக்கின்றன. அதனால் நலம் என்பதை நோய், நோயை குணப்படுத்தல் என்ற குறுகிய வரையறைக்குள் விளக்க முடியாது.
https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D